வவுனியாவில் தோல்வியை சந்தித்த கூட்டமைப்பு!
கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோல்வியடைந்துள்ளது.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தவிசாளர் சு.தணிகாலசத்தினால் சபையில் இன்று முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து பாதீடு தொடர்பில் உறுப்பினர்களின் வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து வரவு செலவு திட்டம் சபையின் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் போது 26 உறுப்பினர்களைக் கொண்ட வவுனியா வடக்கு பிரதேச சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 7 உறுப்பினர்கள் மட்டும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதோடு பொதுஜன பெரமுன கட்சியின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும், சிறிலங்கா சுததந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஈபிஆர்எல்எப் கட்சியின் 3 உறுப்பினர்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் 3 உறுப்பினர்களும், சுயேட்சை ஒரு உறுப்பினரும் என 15 பேர் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
இதன் காரணமாக மேலதிக 8 வாக்குகளால் வரவு செலவு திட்டம் தோல்வியடைந்தது. அதேவேளை வாக்கெடுப்பின் போது ஐக்கிய தேசியபக் கட்சி ஒரு உறுப்பினர் நடுநிலமை வகித்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜேவிபி, பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினர் வீதம் மூவர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.