சிறுமியின் வாழ்வை சீரழித்த பஸ் நடத்துனர் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்
கடந்த 21 ஆம் திகதி காணமல்போன சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
நமுனுகுலையை சேர்ந்த, பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகாத உறவு
கடந்த 21 ம் திகதி பாடசாலைக்கு செல்லாமல் கோழிகளுக்கான உணவை கொள்வனவு செய்வதற்காக பசறை நகருக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என பசறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 21 ஆம் திகதி குறித்த சிறுமியின் தந்தையினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டிற்கு அமைய உடன் விசாரணைகளை மேற்கொண்ட பசறை பொலிஸார் பசறை டெமேரியா மீரியபெத்த ராக்கமலை பகுதியில் லயன் குடியிருப்பு வீடொன்றில் இருந்து சிறுமியை மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பின்னர் சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தான் பசறை நகருக்கு சென்ற போது பஸ் ஒன்றின் நடத்துநருடன் நட்பு ஏற்பட்டுள்ளதாகவும், பின்னர் குறித்த நபரின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த நபரின் வீட்டுக்கு சென்றதாகவும் , நபரின் வீட்டில் யாரும் இருக்கவில்லை எனவும், இதன்போது குறித்த நபர் தன்னுடன் பலமுறை தகாத உறவில் ஈடுபட்டதாகவும் பொலிஸாரிடம் சிறுமி கூறியுள்ளார்.
பசறை வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது தலைமறைவாகி இருந்த சந்தேக நபர் பதுளை பஸ் தரிப்பிடத்தில் இருப்பதாக பசறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பொலிஸ் குழுவினர் உடன் பதுளை பஸ் தரிப்பிடத்திற்கு விரைந்து , பதுளை பஸ் தரிப்பிடத்தில் பொலிஸ் கடமையில் ஈடுபட்டிருந்த பதுளை பொலிஸ் நிலைய அதிகாரிகளின் உதவியுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரை சனிக்கிழமை (24) பசறை நீதிவான் முன்னிலையில் ஆஜர் படுத்திய போது எதிரிவரும் வெள்ளிக்கிழமை (06) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் 28 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.