கிளிநொச்சியில் இடம்பெற்ற கொலைவெறித் தாக்குதல்; வைரலாகும் காணொளி!
கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் இ.போ. ச. பேருந்தினை வழிமறித்த தனியார் பேருந்தினர், இ.போ.சபை பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கிளிநொச்சி சாலைக்கு சொந்தமான இ.போ.சபை பேருந்து, கிளிநொச்சி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 6.10 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்திருந்தது.
அதே நேரத்தில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும் கிளிநொச்சி நகரை வந்தடைந்தது. இதன் போது பயணிகளை ஏற்றுவதில் இரு பேருந்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து கரடிபோக்கு பகுதியினை இ.போ.சபை பேருந்து அண்மித்த சமயத்தில் குறித்த பேருந்தினை வழிமறித்த தனியார் பேருந்தினர், இ.போ.ச பேருந்தின் சாரதி - நடத்துனர், மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளாகிய இ.போ.சபை சாரதி மற்றும் நடத்துனர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை இ.போ.ச பேருந்து நடத்துனர்கள், சாரதிகள் மீது தனியார் துறையினர் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வரும் நிலையில், இன்று இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

