சிறுவர்கள், முதியோர் இடையே அதிகரிக்கும் புற்றுநோய்
இலங்கை சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் இடத்தில் பெருங்குடல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாகத் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,
பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதனை இலகுவில் தடுக்க முடியும் என்று ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்தார்.
எனவே சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் துரித உணவுகளுக்குப் பதிலாக நார்ச்சத்துள்ள உணவுகளுடன் போசனையுடைய உணவுகளை உட்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.
அதேவேளை உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளால் இந்த புற்றுநோய் ஏற்படுவதாகக் கூறினார். மேலும் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல்,மலம் கழிக்கும் முறையில் மாற்றம் இருத்தல்,மலத்தின் தன்மையில் மாற்றம் இருத்தல் என்பன இந்த நோயின் அறிகுறி எனத் தெரிவித்தார்.