நான்கு பொலிஸாருக்கு எதிராக கொழும்பு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு!
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 3 பொலிஸ் அதிகாரிகளுக்கும் நட்டஈடு வழங்குமாறு கொழும்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகளை மீறியமைக்காக கொழும்பு நீதிமன்றம் இந்த உத்தரவை அவர்களுக்கு எதிராக பிறப்பித்துள்ளது.
இதன்படி குறிப்பிடப்பட்ட பொலிஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட நிதியில் இருந்து இந்த 2 மில்லியன் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட 4 பொலிஸ் அதிகாரிகள் 2011 ஆம் ஆண்டு மனுதாரர் டபிள்யூ.ரஞ்சித் சுமங்கலவை சட்டவிரோதமாக கைதுசெய்து, தடுத்துவைத்து, அவரை சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதன் மூலம், தேசபந்து தென்னகோனின் மேற்பார்வையின் கீழ் இருந்த மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என கொழும்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய இராணுவத்தின் ஓய்வுபெற்ற சார்ஜன்ட் மேஜர் அஜித் வனசுந்தர என்ற தனியார் தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட்டு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மனுதாரருக்கு ரூ.100,000 இழப்பீடு வழங்க அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் தேசபந்து தென்னகோன் உட்பட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தேசிய பொலிஸ் ஆணைக்குழு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கொழும்பு உச்ச நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் குமுதினி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் நீதியரசர் எஸ்.துரைராஜா இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.