வெளிநாட்டு பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய இலங்கையருக்கு 10 ஆண்டுகள் சிறை
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு இலங்கையில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அழைத்து வந்து, அவரை பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பில் உள்ள விடுதி ஒன்றில் குறித்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக, தண்டனைச் சட்டக்கோவையின் 360 (அ) (1) பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இலங்கையில் வசித்து வந்த அவரது நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் மூலம் மாதம் 1,500 அமெரிக்க டொலர் சம்பளத்தில் வேலை அல்லது குழந்தை பராமரிப்பு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி அவருக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக விமானச்சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் இலங்கைக்கு வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, இலங்கையில் வசித்து வந்த குறித்த பெண்ணும் அவரது கணவரான லாரன்ஸ் என அடையாளம் காணப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியும் அழைத்துச் சென்று நீர்கொழும்பு பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கவைத்துள்ளனர்.
பின்னர், அந்தப் பெண்ணை வெளிநாட்டவர் ஒருவருக்கு பாலியல் சேவைக்காக பலவந்தமாக அனுப்பியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் அவரைத் தங்கவைத்து, கடவுச்சீட்டை பறித்துக்கொண்டதுடன், வெளி உலகத்துடன் தொடர்புகொள்ள முடியாத வகையில் முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் வழக்கு விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலைமையைத் தாங்க முடியாத குறித்த பெண், இரகசியமாக தனது தாயாருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து அவரது தாய் உஸ்பெகிஸ்தான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக இலங்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைத்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை மறுத்த போதிலும், வங்கி அறிக்கைகள் உள்ளிட்ட பலமான சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2020 டிசம்பர் 31 ஆம் திகதி கொழும்பு விடுதியில் பாலியல் சேவைக்காக வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி, குற்றஞ்சாட்டப்பட்டவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டிருந்தமை வங்கி அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகத் தீர்மானித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட குற்றம் எனக் குறிப்பிட்டு குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.