மாணவர்களுக்கு கை மற்றும் கால்களை மூடும் விதத்திலான ஆடைகளுக்கு அனுமதி
நாட்டில் மாணவர்களிடையே அதிகரித்து வரும் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பாடசாலை மாணவர்கள் சீருடைக்கு மேலதிகமாக கைகள் மற்றும் கால்களை முழுமையாக மூடும் வகையிலான பொருத்தமான ஆடைகளை அணிந்து பாடசாலைக்கு வருவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களை நுளம்புக் கடியிலிருந்து பாதுகாக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக களுவெவ வெளியிட்டுள்ள தகவலின்படி, தற்போது பாடசாலை மாணவர்களிடையே டெங்கு நோய் பரவுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் தீர்மானம் தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் அதிபர்களுக்கும் தேவையான விளக்கங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை மற்றும் மேலதிக வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மாணவர்கள் தரநிலைக்கு ஏற்ப அங்கீகரிக்கப்பட்ட நுளம்பு விரட்டிகளைப் பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
டெங்கு நோய் பரவலைத் தடுக்கும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், பாடசாலை வளாகங்களிலும் சுற்றுப்புறங்களிலும் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றுதல் உள்ளிட்ட சுகாதார நடவடிக்கைகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுக்கொண்டுள்ளது.