சமூகவலைத்தள பதிவுகள் ; யாழ் நிலாவரை கிணற்றுப் பகுதிக்கு விமோசனம்
யாழ்ப்பாண விழுமியங்களில் ஒன்றாக உள்ள சிறப்பு வாய்ந்த வற்றாத கிணறு நிலாவரையை வலிகாமம் கிழக்கு பிரதேச சபையால் விரைவாக தூய்மிப்பு பணிகள் இடம்பெற்றுள்ளன.
பிரதேச சபையினால் நிலாவரை கிணறு உள்ளிட்ட பகுதிகள் சபையின் சொத்தாக பராமரிக்கப்பட்டன. பிரதேச சபையின் நேரடி முகாமைத்துவத்தின் சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் எல்லை மதில்கள் அமைக்கப்பட்டு ஆழமற்ற கிணற்றினைச் சுற்றி பாதுகாப்பு, உலோக வேலிகள், பிரதேசத்தினை அழகுபடுத்தும் மின்குமிழ்கள், பார்வையாளர் இருக்கைகள், நடைபாதைகள் அமைக்கப்பட்டு திறன்பட வலயம் முகாமை செய்யப்பட்டு வந்தன.

விகாரை அமைக்கும் முயற்சி
இதன் மூலம் தமிழ் மக்களின் வரலாறும் தொன்மையும் எடுத்தியம்பப்பட்டு வந்தது. 2021 ஆம் ஆண்டுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மூன்று தடவைகள் பூசகமான முறையில் இராணுவத்தினருடன் இணைந்து தொல்லியல் திணைக்களம் அத்திவாரம் வெட்டியது.
அவர்களின் முயற்சி பௌத்த சிங்கள பேரினவாத நோக்கில் விகாரை அமைக்கும் முயற்சியென குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் பிரதேச சபையாலும் அப்பகுதி மக்களாலும் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

எனினும் பிரதேசத்தில் உள்நுழைபவர்களுக்கான கட்டண அறவீடு தொடர்பில் தொல்லியல் திணைக்களத்தினால் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு வந்ததால் பின்பு பிரதேச சபையினால் குறித்த பகுதியில் செயற்பட முடியவில்லை.
இதன் காரணமாக வற்றாத கிண்று அமைந்துள்ள நிலாவரை பகுதி கழிவுகளாலும் பற்றைகளினாலும் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு பாதிக்கப்பட்டுக் காணப்பட்டது.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் காட்டமான கண்டனங்கள் அண்மைய நாட்களாக வெளியிடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினரும் அப்பகுதி இளைஞகள் , மக்களும் இணைந்து நேற்று புதன்கிழமை (7) நிலாவரை பகுதியை துப்புரவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.