கிளீன் லங்கா; கண்டியில் இரவிரவாக அகற்றப்பட்ட குப்பைகள்!
கண்டி நகரத்தை சுத்தம் செய்யும் பணி மிக வெற்றிகரமாக நிறைவடைந்ததாக கண்டி மாநகர மருத்துவ அதிகாரி பசன் ஜயசிங்க தெரிவித்தார்.
மூவாயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் நேற்று மாலை 6 மணி முதல் இன்று அதிகாலை வரை மழையையும் பொருட்படுத்தாமல் இந்த தூய்மைப் பணியை முழுமையாக செய்து முடித்தனர்.
ஒரு மிட்டாய் காகிதம் கூட இல்லாத அளவுக்கு சுத்தமாகிவிட்டது
பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்து 300 பேர், இலங்கை முழுவதும் உள்ள பொலிஸ் சுற்றுச்சூழல் குழுக்களின் உறுப்பினர்கள், தன்னார்வ அமைப்புகள், கிராமப்புற மக்கள், கண்டி நகரவாசிகள் மற்றும் சாரணர் குழுக்கள் இந்த பெரும் நற்காரியத்திற்காக தாமாக முன்வந்து இணைந்தனர்.
அவர்களுக்காக உணவு, தேநீர் மற்றும் காபி வழங்குவதற்காக தூக்கமில்லாமல் தான்தர்மம் செய்த மனநிறைவான மனிதர்களும் இருந்ததாகவும் அவர் கூறினார். தற்போது நகரம் ஒரு மிட்டாய் காகிதம் கூட இல்லாத அளவுக்கு சுத்தமாகிவிட்டது.
நேற்று சேகரிக்கப்பட்ட குப்பைகள் இன்று காலை கொஹாகொட குப்பை மேட்டில் கொட்டப்பட்டு விட்டன. அதோடு தலதா மாளிகை வழிபாட்டு கடமைகளுக்காக முப்படையினர் மற்றும் பொலிஸ் கடமைகளுக்காக ஒதுக்கப்பட்ட பாடசாலைகளும் இன்று அதிகாலைக்குள் இந்த குழுவினரால் சுத்தம் செய்து முடிக்கப்பட்டன.
நேற்று மாலை 4.40 மணியளவில் கண்டி மாநகரசபை 569 மெட்ரிக் டன் குப்பைகளை கொஹாகொட குப்பை மேட்டில் கொட்டியிருந்தது.
தன்னார்வ அமைப்புகளின் இரவு பகல் தூய்மைப் பணி அதன்பிறகே தொடங்கியது. கண்டி மாநகர மருத்துவ அதிகாரி கண்டி ஏரி சுற்றுவட்ட பாதையை சுத்தம் செய்யும் பணியும் இன்று இரவு மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.