பொலிஸாருடன் மோதல்; ஐவருக்கு நேர்ந்த கதி
பேருவளை மீன்பிடி துறைமுகப் பகுதியில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (10) மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான், ஐந்து சந்தேக நபர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நேற்று (09) இரவு, பேருவளை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில், பொலிஸாருக்கும் பௌத்தக் கொடிகளை ஏற்றி வைத்திருந்த ஒரு குழுவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்போது அந்தக் குழு பொலிஸாரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
குழுவொன்று லொறி ஒன்றில் ஏறி பௌத்தக் கொடிகளை ஏற்றியவாறு இருந்தபோது, பொலிஸார் வீதியை மறைக்க வேண்டாம் என கூறியதை அடுத்தே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.