தற்காலிக வீட்டை அகற்றச் சென்றபோது வெடித்த மோதல் ; நால்வர் காயம்
இரத்தினபுரி - கஹவத்தை - நீலகாமம் பெருந்தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக வீடொன்றை அகற்ற முற்பட்ட போது மோதல் நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது காயமடைந்த 4 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

கல்வீச்சு தாக்குதல்
அத்துடன், தற்காலிக வீட்டை நிர்மாணித்தவர் கைது செய்யப்பட்டு, பொலிஸாரால் பிணை வழங்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக நீலகாமம் தோட்டத்தில் உரிய அனுமதியை பெறாமல், பொதுமகன் ஒருவர் தற்காலிக வீடொன்றை நிர்மாணித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் குறித்த தோட்ட முகாமையாளரால் கஹவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
கிடைத்த முறைபாட்டுக்கு அமைய, இன்று விசாரணை மேற்கொள்வதற்கு செல்வதற்கு முன்னரே, குறித்த பகுதியில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த தோட்டத்துக்கு பாதுகாப்பு வழங்குவதாக தெரிவிக்கப்படும் தனியார் பாதுகாப்பு பிரிவினராலேயே, தற்காலிக வீடு சேதமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, தோட்டத்தில் வசிப்பவர்களுக்கும், குறித்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கும் இடையே கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில், தோட்ட காவலாளிக்கும், பாதுகாப்பு தரப்பை சேர்ந்த இருவருக்கும், வீட்டை நிர்மாணித்தவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.