போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கையின்போது பதற்றம் ; பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே மோதல்
போதைப்பொருள் தேடுதல் நடவடிக்கைக்காக வீடொன்றுக்குள் நுழைந்த பொலிஸாருக்கும் அங்கிருந்த இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது, பொலிஸார் இளைஞர்களைத் தாக்கியதுடன், அவர்கள்மீது போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளை சுமத்த முயன்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தில் இருந்த இளைஞர்கள் மற்றும் பின்னர் அங்கு திரண்ட பொதுமக்கள் சிலர் பொலிஸாருடன் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்களால் தடுத்து வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் பணப்பையில் இருந்து ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
எனினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.