காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கு இடையே முரண்பாடு
கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால், ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பௌத்த பிக்குகளுக்கு இடையே உள்ளக மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கண்டியிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரையாக வந்த பௌத்த பிக்குகள், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் முகாமிட்டு தமது கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
போக்குவரத்துக்கு கடும் பாதிப்பு போராட்டம்
இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற சில பௌத்த பிக்குகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கள நிலவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர், போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் காலி முகத்திடல் பகுதியில் கூடாரம் அமைக்க முற்பட்டபோது, அதனை அகற்றுவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அப்பகுதியில் பதற்றமான சூழலும் உருவாகியுள்ளது.
காரணமாக காலி முகத்திடல் வீதியூடான போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் தொடர்பில் பொதுமக்கள் பலர் பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்புகளை மேற்கொண்டு முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, போக்குவரத்தைச் சீரமைக்கும் நோக்கில் பொலிஸார் சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளுக்கு நிலைமையை விளக்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலியுறுத்தும் நோக்கில் பொலிஸார் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளனர்.