"தேரர்களின் காவி உடையைத் தொடாதீர்கள்"; போராட்டம் தொடர்பில் சஜித் பிரேமதாச கண்டனம்
கண்டியிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரையாக வந்த தேரர்கள், தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அமைதியான முறையில் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தேரர்கள் கொண்டுவந்த புத்தர் சிலைக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட தற்காலிகக் கொட்டகை அகற்றப்பட்டதுடன், அங்கு இருந்த தேரர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டதாகவும், இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி உடனடியாகத் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, மகா சங்கத்தினரின் கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்காமல், இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செய்ய வேண்டியது இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுப்பதல்ல எனக் குறிப்பிட்ட அவர், காவி உடைக்கு உரிய மரியாதையை வழங்கி, தேரர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, தேரர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் துன்புறுத்தல் மற்றும் இடையூறுகளை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.