பூ பறிக்கச் சென்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி்க்கு நேர்ந்த கதி ; சோகத்தில் தவிக்கும் உறவுகள்
மொனராகலை - கோனகங்கார பொலிஸ் பிரிவில் உள்ள கலபிடஆர வாவியை சூழவுள்ள தாமரை பூக்களை பறிக்கச் சென்ற சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வாவியில் மூழ்கி உயிரிந்துள்ளதாக கோனகங்கார பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ராஜமாவத்தை, கோனகங்கார பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஆவார்.
சிவில் பாதுகாப்பு அதிகாரி
சிவில் பாதுகாப்பு அதிகாரி கடந்த வியாழக்கிழமை (8) தாமரை பூக்களை பறிப்பதற்காக கலபிடஆர வாவிக்கு சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் சிவில் பாதுகாப்பு அதிகாரியின் உறவினர்கள் இது தொடர்பில் கோனகங்கார பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணையில், சிவில் பாதுகாப்பு அதிகாரியின் மோட்டார் சைக்கிள், கையடக்கத் தொலைப்பேசி மற்றும் ஒரு ஜோடி செருப்பு கலபிடஆர வாவிக்கு அருகில் வைத்து நேற்று (09)பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வாவியிலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவில் பாதுகாப்பு அதிகாரி தாமரை பூக்களை பறிக்கச் சென்ற போது வாவியில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம், கோனகங்கார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலுதிக விசாரணைகளை கோனகங்ஆர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.