யாழில் சிற்றிக் அமில கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை!
யாழ்ப்பாணத்தில் சிற்றிக் அமிலம் கரைசலை தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்த நிறுவனத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய் பகுதிகளில் உள்ள உணவகங்கள் பழக்கடைகள் என்பவற்றுக்கு , தேசிக்காய் கரைசல் என கூறி , அதற்கான துண்டு சீட்டுக்களும் ஒட்டப்பட்டு , சிற்றிக் அமிலம் கரைசலை 4 லீற்றர் கொள்கலன்களில் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வந்துள்ளது.
90 ஆயிரம் ரூபாய் தண்டம்
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் விற்பனை வாகனத்தை வழிமறித்து சோதனையிட்ட சண்டிலிப்பாய் பொது சுகாதார பரிசோதகர், அவற்றில் இருந்தது தேசிக்காய் கரைசல் அல்ல சிற்றிக் அமிலம் அறிந்து , நிறுவனத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தார்.
அதனை அடுத்து தேசிக்காய் கரைசல் என விற்பனை செய்யப்பட்ட சிற்றிக் அமிலம் கொள்கலன்களை , அரச பகுப்பாய்விற்கு அனுப்பி அறிக்கை பெறுமாறு மன்று பணித்தது.
பகுப்பாய்வு அறிக்கையில் , அவ்கரைசல் தனியே சிற்றிக் அமிலம் என்பதுடன் முழுவதும் கிருமித்தொற்றுடனும் மனித பாவனைக்கு உகந்ததல்லாதகாவும் இருந்தாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, குறித்த நிறுவன உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்தது.
இயற்கை பழச்சாறு என விற்கப்பட்ட பானங்கள் இந்த கரைசலை பயன்படுத்தியே தயாரித்து விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.