நத்தார் கொண்டாட்டத்தில் அடிதடி; 8 பேர் மருத்துவமனையில்
நத்தார் களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 03 பெண்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (25) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இரும்பு கம்பி மற்றும் பொல்லால் தாக்குதல்
அம்பலாங்கொடை, ஹெரியாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு களியாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது, களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நபர்கள் சிலர் அயல் வீட்டில் உள்ள நபர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் , அயல் வீட்டில் உள்ள நபர்கள் சிலர் களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நபர்களை இரும்பு கம்பி மற்றும் பொல்லால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் வேதர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பொல்கஸ்சோவிட்ட, அம்பலாங்கொடை மற்றும் கமத்தவத்த வீதி ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 18 முதல் 36 வயதுக்குட்பட்டவர்களே காயமடைந்துள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.