மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் கிறிஸ்தவ மத போதகர் மரணம்
ஹட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளன்டில் தோட்டத்தின் நடுவத்தைப் பிரிவில் இன்று (30) மாலை ஏற்பட்ட மண் சரிவு சம்பவத்தில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இச்சம்பவம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமார தெரிவித்தார்.
குறித்த பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயத்தை விரிவுபடுத்தும் நோக்கில் நிலத்தை வெட்டிச் செப்பனிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்ததில் அப்பணியில் ஈடுபட்டிருந்த மத போதகர் மண்ணுக்குள் சிக்கியுள்ளார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து அவரை மீட்டதுடன், உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் பெரிய நடுவத்தை தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மத போதகரான ராஜேந்திரன் கோபிநாத் (41) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் ஒரு பிள்ளையின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.