சீன பிரஜை கடத்தப்பட்டு கொலை; சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பிற்கு
கொழும்பு போர்ட் சிட்டி பகுதியில் சீன பிரஜை ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சீன பிரஜைகள் இன்று (27) அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவொன்றின் உறுப்பினர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்
கடந்த ஜூலை 22 ஆம் திகதி புதன்கிழமை இரவு, கொழும்பு போர்ட் சிட்டி பாலத்தில் மூன்று சீன பிரஜைகள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேனில் வந்த மற்றுமொரு சீன பிரஜைகள் குழு, அங்கிருந்த மூன்று பேரையும் தாக்கி, அவர்களின் கை கால்களைக் கட்டி, அவர்களில் ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளது. பின்னர், கடத்தப்பட்ட நபரின் சடலம் எஹலியகொடை, கரத்தன பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
பலமுறை கத்தியால் குத்தப்பட்டதால் ஏற்பட்ட உள்உறுப்பு காயங்கள் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலத்தை சீன தூதரகத்தின் ஊடாக நாட்டிற்கு அனுப்பி வைப்பதற்கான நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், உயிரிழந்த ஹாவ் சோங் என்ற நபரும் இணையவழி குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பதும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.