கடன் மறுசீரமைப்பு உடன்பாட்டிற்கு சீனாவின் தலையீடு அவசியம்!
இலங்கையின் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் உள்ள சில உறுப்பு நாடுகள், சீனாவின் பங்கேற்பு இல்லாமல் நாட்டின் கடன் மறுசீரமைப்பு, உடன்பாட்டை எட்டுவதற்கு அழுத்தம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மொராக்கோவில் எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி கூட்டத்தின் போது அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியா உள்ளிட்ட முக்கிய கடன் வழங்குநர்கள் குழு இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனில் கடந்த ஆண்டு இறுதி வரை சுமார் 10 வீதத்தை கொண்டிருந்த சீனா, கடன் வழங்குநர் குழுவில் அங்கம் வகிக்கவில்லை.
அதேநேரம் தனியாக இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மொரோக்கோவில் ஒன்று கூடுவதற்கு முன்னர், சீனாவைத் தவிர முக்கிய கடன் வழங்குநர்கள், வரைவை ஒன்றிணைத்து இலங்கையின் அனுமதியை பெற திட்டமிட்டுள்ளனர்.
கருத்து தெரிவிப்பு
இதனிடையே இலங்கைக்கான மிகப் பெரிய கடன் தொகையை வழங்கியுள்ள ஒரு தரப்பினரான பெரிஸ் கிளப்பின் அதிகாரி ஒருவர், கருத்துரைக்கையில், தமது உடன்பாட்டுக்கான காலக்கெடுவை உறுதிப்படுத்த முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகத்தில் உள்ள பிரதிநிதிகள் இந்த நிலைப்பாடு தொடர்பில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை.
கடன் வழங்கிய நாடுகள், சீனாவின் தாமதம் காரணமாக பொறுமை இழந்துவிட்டார்களா அல்லது இந்த நடவடிக்கை பீஜிங்கிற்கு அழுத்தம் கொடுப்பதற்கான பேச்சுவார்த்தை உக்தியா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
சீனா இந்த உடன்படிக்கையில் இருந்து விலக்கப்பட்டாலும், கடன் வழங்குனர்களுடனான எந்தவொரு ஒப்பந்தத்திலும் இலங்கைக்கு நன்மை ஏற்படும் என கருதப்படுகிறது.