ஜோதிடர்கள் கூறிய ஆரூடம்; மகிந்தவை பிரதமராக்கும் முயற்சியில் சீனா!
முன்னாள ஜனாதிபதி மகிந்தவுக்கு மீண்டும் பிரதமர் பதவியை பெற மே 7ஆம் திகதி மிகவும் உகந்த நாளென ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கேற்ப, இந்த திகதியை மனதில் வைத்து மஹிந்த பிரதமராகும் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.
சீனத் தூதுவர் எப்போதும் மகிந்தவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அடிக்கடி சென்று கலந்துரையாடல்களை நடத்துவது தெரிய வந்துள்ளது.
ரகசிய காய்நகர்த்தும் சீனா
இவ்வாறாக இந்த நாட்களில் சீனத் தூதுவர் விஜேராமவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அடிக்கடி வருகை தந்ததன் பின்னணியில் மற்றுமொரு திட்டம் பற்றி கசிந்துள்ளது.
கோட்டாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும், எதிர்காலத்தில் மஹிந்த பிரதமரானால் நடக்கப்போகும் ஒரு சம்பவத்தையும் பற்றியதுதான் அது. கோத்தா ஜனாதிபதியாக இருந்தபோது பொருளாதார நெருக்கடியின் ஆரம்பத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்த போது, கடனை செலுத்த முடியாமல் திவாலான நாடாக இலங்கை பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னரே , இலங்கைக்கு உடனடி உதவி வழங்கும் நோக்கில் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க சீனா தீர்மானித்திருந்தது.
அதன்படி, முதல் சிங்கள புத்தாண்டுக்காக இந்த 4 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்க சீனா இணங்கியுள்ளதாகவும், சீனாவால் அதை வழங்க முடியும் எனவும் அப்போதைய மத்திய வங்கியின் ஆளுநராக கடமையாற்றிய அஜித் நிவார்ட் கப்ரால் கோத்தாவிடம் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியிருந்தார்.
ஆனால் அங்கு அவருக்கு நிதி ஆலோசனை வழங்கிய முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி மற்றும் அவரது குழுவினர் நாடு திவாலானதாக அறிவித்து கடனை செலுத்துவதை இடைநிறுத்துமாறு அறிவுறுத்தியதாக கோட்டா கப்ராலுக்கு தெரிவித்திருந்தார்.
காதுகொடுத்து கேட்காத கோட்டா
அதற்கு எதிராக கோட்டாவிடம் கப்ரால் எவ்வளவோ வாதாடி கூறியும், கோட்டா தனது கருத்தை மாற்றிக் கொள்ளாததால், சீனா கொடுக்க தயாராக இருந்த 4 பில்லியன் டாலர் கடனை வாங்காமல் நாட்டை திவாலானதாக அறிவிக்க நிதி அமைச்சகம் முடிவு செய்தது.
அது மாத்திரமன்றி அந்த அறிவுறுத்தல்களின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கும் கோத்தா நடவடிக்கை எடுத்தார்.
ஆனால் சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க அனுமதித்துள்ள நிலையில் , சீனத் தூதுவர் தொடர்ந்தும் விஜேராமவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று மஹிந்தவை சந்திப்பது ஏன்?
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்காலத்தில் எதிர்க்க மகிந்த தீர்மானித்தது ஏன்? அது வேறு எதனாலும் அல்ல, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை எதிர்த்து மஹிந்த பிரதமர் பதவிக்கு வந்தால் நிதி நிதியத்தின் கடன் வசதி கிடைக்காது என்பதால் , சீன கடன் உதவியை மகிந்த பெற்றுக்கொள்ள மனது வைத்துள்ளார்.
மீண்டும் இலங்கையில் ஆதிக்கம் செலுத்த விரும்பும் சீனா
முன்பு போலவே மஹிந்த பிரதமரானால் ,கோட்டாவுக்கு கொடுக்க இருந்த 4 பில்லியன் டொலர்களுக்கு பதிலாக சீனாவிலிருந்து 5 பில்லியன் டொலர்களை மகிந்தவிற்கு வழங்க சீனா திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. சீனா ஏன் இவ்வாறு மீண்டும் இலங்கைக்குள் பிரவேசிக்கத் தயாராகிறது என்ற கடுமையான கேள்வியும் எழுந்துள்ளது.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், அமெரிக்காவும் சீனாவும் மீண்டும் புவிசார் அரசியலில் முகாமிடத் தயாராகி வருவதைக் காண முடிகிறது.
அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐரோப்பா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் ஒரே முகாமில் இணைந்தபோது, சீன அதிபர் ஜி ஜின்பிங் திடீரென ரஷ்யா சென்று, சீனா-ரஷ்யா உறவை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி இலங்கையை அந்த குழுவில் சேர்க்க சீனா முயற்சிக்கிறதா என்பதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த நாட்களில் விஜேராமவில் உள்ள மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சீனத் தூதுவர் அடிக்கடி வந்து செல்வதன் பின்னணியில் பல அரசியல் கதைகள் மறைந்திருப்பது தெளிவாகிறது.
-ஜீவன் பிரசாத்