செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் ; நீதிக்காக மக்கள் எழுச்சி போராட்டம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொடூரங்களுக்கு நீதி கோரி, ‘உரிமைப்பந்தம்’ என்ற தொனிப்பொருளில் அமைதிவழி மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று (28) மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் செம்மணிச் சந்தியில் அமைந்துள்ள அணையா விளக்குத் திடலில் மாலை 4.30 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானது.

கடந்த வருடம் இதே நாளில் செம்மணியில் முன்னெடுக்கப்பட்ட ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் தொடர்ச்சியாகவும், நீதிக்கான கோரிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும் இம்மக்கள் எழுச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் இதில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
நீண்டகாலமாக நீதிக்காகக் காத்திருக்கும் மக்கள், முன்வைக்கப்பட்டுள்ள ஆறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை தொடர்பில் உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனக் கோரியும் இந்த அமைதிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
செம்மணி மண்ணில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்த மக்கள் எழுச்சி அமைந்திருந்தது.