தேசபந்து தென்னகோன் மீது ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை
முன்னாள் காவல்துறை மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மீது, ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தின் சந்தேகநபராக தேசபந்து தென்னகோனை பெயரிடுமாறு, சட்ட மாஅதிபரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்கி, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக, சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

நீதியரசர்களான ஏ.எச்.எம்.டி. நவாஸ், அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத், பிரதிவாதியான தேசபந்து தென்னகோனுக்கு எதிராக, ஒரு மாதத்துக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா, தனது சேவை பெறுநருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால், இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்துவதில் பயன் இல்லை என நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதியரசர்கள் ஆயம், இந்த மனுவை மீண்டும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.