ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் ; நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக 24 குற்றச்சாட்டுகள்
எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு இன்று (27) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இதன்படி, பிரதிவாதிகளுக்கு எதிராக மொத்தம் 24 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கை விமான சேவைக்காக ஏர்பஸ் விமானங்களைக் கொள்வனவு செய்துகொண்ட பரிவர்த்தனையுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சுமார் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் முன்னதாகக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் நீதிமன்றத்தின் முன்னிலையில் முன்னெடுக்கப்படவுள்ளன.
எனினும், குற்றச்சாட்டுகள் தொடர்பான இறுதித் தீர்மானம் நீதிமன்ற விசாரணைகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.