மின் கட்டணம் குறைக்கும் 38.7 மில்லியன் நட்டம் ; மத்திய வங்கி எச்சரிக்கை
மின்சாரக் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை 38.7 பில்லியன் ரூபாய் நட்டத்தைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
South Asians & Diaspora மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையிலேயே இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
நட்டத்திற்கான காரணங்கள் மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டு மின்சார சபையின் நிதி நிலைமை சரிவடைந்தமைக்கு பின்வரும் காரணங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

2024ஆம் ஆண்டில் பலமுறை கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025 ஜனவரியிலும் மின்சாரக் கட்டணங்கள் சராசரியாக 20% குறைக்கப்பட்ன.
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நிலவிய வறண்ட வானிலை காரணமாக, நீர்மின் உற்பத்தி குறைந்து அனல்மின் உற்பத்தி (Thermal Power) அதிகரித்தது.
இதனால் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான செலவு கணிசமாக உயர்ந்தது. திரட்டப்பட்ட நட்டத்தை ஈடுகட்ட 2025 ஜூன் மாதம் மின்சாரக் கட்டணங்கள் 15% உயர்த்தப்பட்டன.
இருப்பினும், மின்சார சபையின் நிதிச் சுமையைக் குறைக்க இந்த உயர்வு போதுமானதாக இருக்கவில்லை என மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்து வரும் கடன் சுமையினால் மின்சார சபையின் நிதிப் பற்றாக்குறை காரணமாக அதன் கடன் மற்றும் பொறுப்புக்களும் பாரியளவில் அதிகரித்துள்ளன.
2024 இறுதியில் 174.3 பில்லியன் ரூபாயாக இருந்த குறுகிய காலக் கடன், 2025 இறுதியில் 206.2 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளதுடன், இதே காலப்பகுதியில் நீண்ட காலப் பொறுப்புக்கள் 409 பில்லியனில் இருந்து 411.2 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.
எதிர்கால வருமான முன்னறிவிப்புகள் மற்றும் உற்பத்திச் செலவுகளைக் கருத்திற்கொண்டு, 2026 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மேலும் 10.3% உயர்த்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
நிதி நட்டங்களுக்கு மத்தியிலும், 2025ஆம் ஆண்டில் மின்சாரத்திற்கான தேவை 5.8% வளர்ச்சியடைந்துள்ளது.
குறிப்பாக வீட்டுப் பாவனையாளர்களுக்கான மின் தேவை அதிகரித்துள்ள போதிலும், ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி காரணமாக மின் தேவையில் தற்காலிக வீழ்ச்சி காணப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.