சட்டவிரோத மது பானத்தால் நேர்ந்த சோகம் ; பரிதாபமாக மூவர் பலி
களுத்துறை - கரன்னாகொட, வரக்காகொட பகுதியில் சட்டவிரோதமான மதுபானம் அருந்தியதாகக் கூறப்படும் மூவர் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளதாக வரக்காகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 43 முதல் 68 வயதுக்குட்பட்ட மூன்று நபர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தீவிர சிகிச்சை
இவர்கள் மூவரும் கடந்த 27 ஆம் திகதி சட்டவிரோத மதுபானம் அருந்தியதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களில் ஒருவர் நேற்று அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் போது வழியில் உயிரிழந்துள்ளார்.
மற்றையவர் ஹொரணை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மூவருக்கும் கண் பார்வை மங்குதல், வாந்திபேதி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.
விசாரணை
இந்நிலையில், அதே பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் நால்வர் களுபோவில, ஹொரணை மற்றும் ஜயவர்தனபுர ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பிரதேசவாசிகள் அளித்த தகவலின் பேரில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளனர்.
தொட்டுபொல, வரக்காகொட பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வரக்காகொட பொலிஸார் தெரிவித்தனர்.