தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்த இலங்கையர் உட்பட மூவருக்கு எதிராக வழக்கு
தமிழக சட்டசபை தேர்தலில் வாக்களித்ததாக இலங்கை, கனடா மற்றும் ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்ற மூன்று வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இதில், சென்னை அசோக் நகரை பூர்வீகமாகக் கொண்ட கனடா குடியுரிமை பெற்ற ஒருவர், கடந்த மாதம் குடும்பத்துடன் சென்னை வந்திருந்த போது தி.நகர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர் கனடா திரும்பும் போது கை விரலில் இருந்த மை அடையாளத்தை வைத்து விசாரணை மேற்கொண்ட குடியுரிமை அதிகாரிகள் இந்த விவரத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்படாததால் அடையாள அட்டையை பயன்படுத்தி வாக்களித்ததாக அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதேபோல், விருகம்பாக்கம் பகுதியில் ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்ற ஒருவர் விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்ததாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அத்துடன், இலங்கை குடியுரிமை பெற்ற ஒருவர் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களித்ததாகவும் தெரியவந்துள்ளது.
அவர் மீதும் கொடுங்கையூர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, சமீபத்திய தேர்தலில் சில தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் முடிவுகள் தீர்மானிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது எனவும், வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.