கல்முனையில் முற்றுகை இடப்பட்ட வீடு; பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கல்முனை பிரதேசத்தில் வீடொன்றின் மொட்டை மாடியில் சூட்சுமமாக மறைத்து வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகள் அடங்கிய தோட்டத்தை பொலிஸார் நேற்று (19) புதன்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோதே, குறித்த வீட்டின் 4 ஆம் மாடி மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் இரகசியமாக வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தமை தெரியவந்தது.

சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில் கஞ்சா
கைதான சந்தேகநபர் காலை மற்றும் மாலை வேளைகளில் இடியப்பம், பிட்டு போன்ற சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் போர்வையில், இரகசியமாக கஞ்சாவினை விற்பனை செய்து வந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
குறித்த வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகள் மிகவும் பாதுகாப்பாக, ஒரு முறைப்படியான பயிர்ச்செய்கை போன்று வளர்க்கப்பட்டிருந்தன.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் அங்கு வளர்க்கப்பட்ட செடிகளைக் கைப்பற்றிப் பிடுங்கி, கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பில் சுமார் 56 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.