அட்சய திருதியை தங்கத்தை தவிர வேறு எதெல்லாம் வாங்கலாம் தெரியுமா?
இந்து மதத்தில் அட்சய திருதியைக்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. சொல்லப்போனால் அட்சய திருதியை தினமானது மிகவும் மங்களகரமான நாளாகும். இந்நாளில் எந்த செயல்களை செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும் மற்றும் எதை வாங்கினாலும் அது பெருகும்.
இப்படிப்பட்ட புனிதமான அட்சய திருதியை நாளானது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் வரக்கூடிய திருதியை திதியில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.
தற்போது தங்கம் விற்கும் விலைக்கு, அதை வாங்குவது என்பது அனைவராலும் இயலாத ஒன்று. இந்நிலையில் லட்சுமி தேவி வாசம் செய்யும் வேறுசில பொருட்களை வாங்கலாம். இப்போது அட்சய திருதியை நாளில் தங்கத்திற்கு பதிலாக வேறு எந்த பொருட்களை வாங்கலாம் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
மண் பானை
அட்சய திருதியை நாளில் மண் பானை வாங்குவது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த மண் பானையை வாங்குவது வீட்டிற்கு நிதி ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த மண் பானையில் தினமும் நீரை ஊற்றி பயன்படுத்தலாம். கோடையில் மண் பானையில் நீரை ஊற்றி குடித்தால், ஃப்ரிட்ஜ் தண்ணீரைக் குடித்தது போன்று ஜில்லென்று இருக்கும்.
பித்தளை அல்லது செம்பு
பாத்திரங்கள் உங்களால் அட்சய திருதியை நாளில் தங்கம் அல்லது வெள்ளி பாத்திரங்களை வாங்க முடியாவிட்டால், வருத்தம் கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக பித்தளை அல்லது செம்பு பாத்திரங்களை வாங்குவது அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இந்த வகையான உலோக பொருட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, லட்சுமி தேவியின் ஆசியை பெற உதவுவதாக நம்பப்படுகிறது.
சோழி
சோழி லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட சோழியை அட்சய திருதியை நாளில் வாங்குவது நல்லது. அதுவும் 11 சோழிகளை வாங்கி, அவற்றை சிவப்பு துணியில் சுற்றி, லட்சுமி தேவியின் முன் வைத்து வழிபட்டு, பின் அவற்றை பணம் வைக்கும் பெட்டியில் வைத்தால், பணம் பெருகும்.
பார்லி
பூமி தாயால் பரிசளிக்கப்பட்ட முதல் தானியமாக பார்லி கருதப்படுகிறது. இந்த பார்லி விஷ்ணுவின் அடையாளமாகும். இந்த பார்லியை அட்சய திருதியை நாளில் வாங்குவது வீட்டிற்கு செழிப்பை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது
வெண்கடுகு
அட்சய திருதியை நாளில் வெண்கடுகு விதைகளை வாங்குவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த வெண்கடுகை வீட்டில் வைத்திருப்பது லட்சுமி தேவியை மகிழ்விப்பதாகவும், மகிழ்ச்சியையும் செல்வத்தையும் தருவதாகவும் நம்பப்படுகிறது.
கல் உப்பு
அட்சய திருதியை தினத்தில் வேறு எந்த பொருட்களை வாங்க முடியாவிட்டாலும் கல் உப்பை ஒரு பாக்கெட்டை வாங்குங்கள். ஏனெனில் கல் உப்பு லட்சுமி வாசம் செய்வதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எனவே கல் உப்பை வாங்குங்கள்.
துடைப்பம்
அட்சய திருதியை நாளில் வாங்க ஏற்ற மற்றொரு பொருள் தான் துடைப்பம். வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் துடைப்பம், லட்சுமி தேவி குடியிருக்கும் ஒன்றாக கருதப்படுகிறது. எனவே முடிந்தால் வீட்டில் ஒரு துடைப்பத்தை வாங்கி போடுங்கள்.
காட்டன் பஞ்சு
உங்களால் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியாவிட்டாலும், காட்டன் பஞ்சு வாங்கலாம். இந்த பஞ்சு பிரார்த்தனையின் போது விளக்குகளை ஏற்ற பஞ்சு திரி போல பயன்படுத்தப்படுவதால், இவற்றை வாங்குவது வீட்டிற்கு அமைதியையும் செழிப்பையும் தரும் என்று நம்பப்படுகிறது.