தலைமன்னாருக்கான புகையிரத சேவையை மீண்டும் ஆரம்பிக்க கோரிக்கை
தலைமன்னார் தொடருந்து பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒரு மாதத்திற்கும் மேலாகியுள்ளதால், அந்தப் பாதையிலான தொடருந்து சேவைகளை உடனடியாக மீண்டும் ஆரம்பிக்குமாறு தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புனரமைக்கப்பட்ட இந்த தொடருந்து பாதை, தொடருந்து இயக்கத்திற்கு முழுமையாகத் தயாராக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், மேலும் தாமதிக்காமல் சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.

புகையிரத சேவை
கடந்த வருடம் ஏற்பட்ட தித்வா அனர்த்த நிலைமை காரணமாக தலைமன்னார் புகையிரத பாதையின் சில இடங்கள் சேதமடைந்தன. இதனால் தலைமன்னாருக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டது.
எனினும் தற்போது அந்தப் பாதையில் புகையிரதங்களை இயக்குவதற்குப் பொருத்தமான வகையிலும், 120 கி.மீ வேகத்தில் புகையிரதங்களை இயக்கக்கூடியவாறும் பாதையை அமைக்கும் பணிகளை வீதிப் பிரிவின் அதிகாரிகளும் ஊழியர்களும் நிறைவு செய்துள்ளனர்.
ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இதுவரையில் அந்தப் பாதையில் பயணிகள் புகையிரத சேவைகளை ஆரம்பிப்பதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.