இலங்கைக்கு வருமாறு ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அழைப்பு!
இலங்கைக்கு வருமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெட்டிற்கு அழைப்பு விடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கின்ற முக்கியமான நாடுகளின் பிரதிநிதிகளையும் இலங்கைக்கு விஜயம் செய்யும்படி அரசாங்கம் அழைப்பு விடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைப் படையினர் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் அடுக்கடுக்காக உள்ளன.
அவற்றின் உண்மை நிலையை நேரடியாக பார்ப்பதற்காக இவ்வாறு பிரதிநிதிகளை அழைக்க அரசாங்கம் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த விவகாரம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
இதன்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைப்பதற்கான யோசனை வெளிவிவகார அமைச்சிற்கு உள்ளதாக அவர் உறுதிசெய்தார்.