சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித யாத்திரை தலமாக சபரிமலை ஐயப்பன் ஆலயத்தை பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நீண்டகாலமாக இலங்கையின் இந்து பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் அடுத்த வருடத்தின் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்குச் சென்று தரிசித்து வருகின்றனர்.
தற்போது ஆண்டுதோறும் 15,000 இற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்கின்ற யாத்திரை தலமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது.
அதற்கமைய, சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்கு இலங்கை இந்து யாத்திரிகர்களால் மேற்கொள்ளப்படுகின்ற யாத்திரையை, இலங்கை அரசால் அங்கீகரிக்கப்பட்ட புனித தலயாத்திரையாகப் பிரகடனப்படுத்துவதற்கும் அதற்கான வசதிகளை வழங்கவும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.