கொழும்பில் வர்த்தகர் கொலை சம்பவம் ; 22 வயது இளைஞன் விளக்கமறியலில்
வத்தளை ஹந்தல பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இளைஞன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி மேற்படி வீட்டில் துர்நாற்றம் வீசுவதாகவும் குறித்த வீட்டின் உரிமையாளரை நீண்ட நாட்களாக காணவில்லை எனவும் தெரிவித்து வத்தளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதற்கமைய வத்தளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட விசாரணை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான வீட்டை சோதனையிட்டுள்ளனர். இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
56 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனைகள் ராகம வைத்தியசாலையின் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன்போது குறித்த நபர் கூரிய ஆயுத்தால் கழுத்து பகுதியில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் அவர் கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் கடந்த 27 ஆம் திகதியே சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சிசிரிவி கேமராக்களின் உதவியுடன் மேற்கொண்ட விசாரணையில் போது இதனுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டியின் சாரதி ஒருவர் தொடர்பான விடயங்கள் வெளிக்கொணரப்பட்டிருந்தன.
குறித்த சாரதியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது லஹிரு எனும் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதுடன் அவரை கைது செய்ய வத்தளை பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
மிக நீண்ட தேடுதல் நடவடிக்கையின் பின்னர் சந்தேக நபர் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்டிருந்தார். சந்தேக நபரிடம் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தில் குறித்த வீட்டில் இருந்த தங்க ஆபரணங்களை திருடும் நோக்கில் இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.உயிரிழந்த வர்த்தகருக்கு சந்தேகநபருக்கு இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இக்கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.