இரவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை பரபரபாக்கிய இளம் வர்த்தகர்
8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போதைப்பொருள்
சந்தேகநபர் ரத்மலானை, ஜயமாவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய வர்த்தகர் எனத் தெரியவந்துள்ளது.
அவர் ஓமானில் இருந்து இந்தப் போதைப்பொருளுடன் கட்டாரின் தோஹாவிற்கு சென்று, அங்கிருந்து கட்டார் எயார்வேஸ் விமானத்தின் மூலம் நேற்று (30) இரவு 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
3 கிலோ 994 கிராம் எடையுள்ள போதைப்பொருளை 10 பொதிகளாக தயார் செய்து, சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்த பிஸ்கட் மற்றும் சொக்லேட் உறைகளுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேகநபர் விமான நிலைய வளாகத்தில் வைத்து அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் ஆலோசனையின் பேரில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.பி. ஹேரத்தின் கண்காணிப்பின் கீழ் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சந்தேகநபர் இன்று (30) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.