கொழும்பில் இன்று முதல் அமுலாகும் புதிய நடைமுறை
கொழும்பு பிரதேசத்தில் பஸ் முன்னுரிமைப் பாதை திட்டத்தை இன்று (02) முதல் நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பஸ் முன்னுரிமைப் பாதை திட்டம் இன்று (02) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேறு வாகனங்கள் செல்ல முடியாது
அதன்படி வெள்ளவத்தை சவோய் சினிமா திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து காலி வீதி, கொழும்பு கோட்டை வரை காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மருதானை வீதி பொரளை சந்தியிலிருந்து கோட்டை ஒல்கெட் மாவத்தை வரையிலும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை இந்த முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், தனியார் பஸ்கள், பாடசாலை பஸ்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள், பஸ்கள் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கப்படும்.
அதேவேளை மேற்குறிப்பிட்ட நேரத்தில் இந்த பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.