பொலிஸாரின் உத்தரவை மீறி பேருந்து செலுத்திய சாரதிக்கு ரூ.35,000 அபராதம்
பொலிஸாரின் உத்தரவையும் மீறி மது போதையில் பேருந்தை செலுத்திச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி ஒருவருக்கு நீதிமன்றம் 35,000 ரூபா அபராதம் விதித்துள்ளதுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தையும் ஆயுள் காலத்திற்கு இரத்துச் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இன்று (19) காலை மருதானை, சங்கராஜ மாவத்தையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இலக்கம் 05 பேருந்தை நிறுத்துமாறு மருதானை போக்குவரத்துப் பொலிஸார் சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும், பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் சாரதி பேருந்தை தொடர்ந்து செலுத்திச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் பேருந்தை துரத்திச் சென்று இடைமறித்து சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது, சாரதி மது அருந்திய நிலையில் பேருந்தைச் செலுத்தியமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து 58 வயதுடைய குறித்த சாரதி கைது செய்யப்பட்டு, புதுக்கடை இலக்கம் 07 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், சாரதிக்கு 35,000 ரூபா அபராதம் விதித்ததுடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஆயுள் காலத்திற்கு இரத்துச் செய்யவும் உத்தரவிட்டது.