இன்புளுவென்சா தொற்று; மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
தற்பொழுது நாட்டில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான இருமல் மற்றும் அதிக சோர்வு
பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும், தும்மும்போதும் அல்லது பேசும்போதும் வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் இத்தொற்று பரவும் எனச் சிரேஷ்ட விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் ஆனந்த விஜேவிக்கிரம குறிப்பிட்டுள்ளார்.
திடீரெனத் தோன்றும் காய்ச்சல், குளிர், தொடர்ச்சியான இருமல் மற்றும் அதிக சோர்வு ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும். சிலருக்கு நிமோனியா போன்ற தீவிர சுவாசப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நீரிழிவு, இதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக நோய் உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், அறிகுறிகள் தென்பட்டால் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்தல் மற்றும் சுயமாக மருந்துகள் எடுப்பதைத் தவிர்த்து மருத்துவ ஆலோசனைகளைப் பெறுதல் ஆகிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.