விபத்தை ஏற்படுத்தி தப்பியோடிய பஸ் சாரதி கைது ; மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு
முல்லைத்தீவு சிலாவத்தை சந்தி பகுதியில் விபத்தை ஏற்படுத்திய பஸ் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எதிரே வந்த இருசக்கர மோட்டார் வாகனத்துடன் பஸ் மோதியதில் அதில் பயணம் செய்த இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணை
விபத்துக்குப் பின்னர் பஸ்ஸை நிறுத்தாமல் சென்ற சாரதி, அளம்பில் இராணுவ முகாமிற்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு முகாமுக்குள் தஞ்சம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து சம்பவ இடத்தில் மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
சம்பவம் தொடர்பில் செம்மலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மது போதையில் இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சாரதியை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.