14 பேரை காவுகொண்ட பேருந்து விபத்து; சாரதிக்கு ஏற்பட்ட நிலை!
கடந்த மார்ச் 20 ஆம் திகதி பதுளை - லுணுகலை வீதியில் பசறையில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீரென சுகயீனம் அடைந்த அவர், முதலில் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதன்பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்படாததையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
லுணுகலை - பதுளை வீதியில் பசறை 13 ஆம் கட்டை பிரதேசத்தில் கடந்த மார்ச் 20ஆம் திகதி தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அத்துடன் இந்த விபத்தில் ஐந்து சிறுவர்கள், 13 பெண்கள் உள்ளடங்களாக 33 பேர் விபத்தில் காயம் அடைந்தனர்.
இதேவேளை பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்து மற்றும் வீதி அனுமதிப் பத்திரத்தின் உரிமையை கொண்டிருந்த வர்த்தகர் காப்புறுதி பெற்றுக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளார்.
அத்துடன் முன்னைய உரிமையாளரின் பெயரில் பேருந்தின் உரிமை மற்றும் வீதி அனுமதிப்பத்திரம் என்பன இருந்ததன் காரணமாக இவ்வாறு சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.