முருகன் ஆலயத்துக்கு அருகில் திடீரென முளைத்த புத்தர் சிலை ; தமிழர் பகுதியில் சம்பவம்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலை ஒன்றில் புத்தர்சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. அதோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.அங்கு பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது.
முருகன் சிலைக்கு அனுமதி மறுப்பு
உகந்தமலையில் நாங்கள் முருகன் சிலை ஒன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இப் புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது? என்று மக்கள் கோருகின்றனர்.
கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்ற திட்டமிட்ட சதி நடக்கிறதா? என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். இந்த விடயம் தொடர்பாக இந்துக்கள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித்திடமும் மக்கள் முறையிட்டுள்ளனர். உகந்தமலையில் வள்ளியம்மன் மலையில் கடந்த காலத்தில் முருகன் சிலையை நிறுவுவதற்கு முன்னாள் கிழக்கு ஆளுநர் அமைச்சர்கள் முதல் ஆலய நிர்வாகத்தினர் முயற்சி செய்த போது அதற்கு வனஜீவராசிகள் திணைக்களம் தடை செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், அதே சூழலில் உள்ள மற்றொரு மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருப்பது குறித்து இந்துக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன மத பேதம் பார்க்கப்படாத இன்றைய அரசாங்கத்தின் கவனத்திற்கு இதனை கொண்டு வருகிறோம். உரிய நீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்துக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.