யாழில் பாடசாலை ஒன்றில் ஆசிரிய உதவியாளரின் மூர்க்கத்தனம்; மாணவிகள் மீது கடும் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் வலி தெற்கு பாடசாலை ஒன்றின் ஆசிரிய உதவியாளரான பெண் ஒருவர், மாணவிகள் மீது மூர்கத்தனமான தாக்குதல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் முகநூலில் பதிவிட்டுள்ளனர்.
யாழ். குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
முகநூலில் பதிவிட்ட பெற்றோர்
குறித்த உதவியாளரான ஆசிரியர் தரம் 4 மாணவிகள் மீது தாக்கியதால் இரண்டு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பிளான் விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் தரம் நான்கு வகுப்பில் 15 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
குறித்த வகுப்பு ஆசிரியர் 5 மாணவர்களை மாத்திரம் கற்பித்து கொண்டு ஏனைய 10 மாணவர்களை கற்பிப்பதற்கு க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடைந்த 20 வயதான யுவதி ஒருவரை 10000 ரூபாய் சம்பளத்திற்கு பணிக்கு அமர்த்தியுள்ளார்.
மாணவிகள் இருவர் பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்ததன் காரணமாக குறித்த பெண் மாணவர்களை தடியால் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.
இதனையடுத்து இரு மாணவிகளின் பெற்றோரும் அதிபருடன் முரண்பட்துடன், பாதிக்கப்பட்ட மாணவியின்பெற்றோர் தனது முகநூலில் பிள்ளையின் நிலையினை புகைப்படம் எடுத்து பதிவேற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து அதிபர் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோரை அழைத்து, அது தொடர்பில் கேட்டதுடன் , இவ்வாறு பதிவிட்டால் மேலதிக பிரச்சினைகள் எழும் எனவும் குறித்த தற்காலிக ஆசிரியையினை தான் வெளியேற்றியுள்ளதாகவும் கூறியதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
அதுமட்டுமல்லாது பொறுப்பாசிரியர் மீது கல்வி திணைக்கள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை குறித்த ஆசிரியரிடம் தனிப்பட்ட கற்கை நெறிக்காக தம்மிடம் வருமாறு மாணவர்களை அழைத்ததாகவும் , பிள்ளைகள் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் இவ்வாறு மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டதாகவும் தெரியவருகின்றது.
குறித்த பாடசாலையில் கல்விகற்று இன்று பல துறைகளில் உள்ளூரிலும் , வெளிநாடுகளிலும் பாடசாலை பழைய மாணவர்கள் பலர் ஆளுமையான பதவிகளில் உள்ளனர்.
இந்நிலையில் ஆரம்ப கல்வியை ஆர்வமுடன் மாணவர்கள் கற்றுவருகையில், இவ்வாறானவர்களின் மூர்கத்தனமான தாக்குதல்களினால் அவர்களில் கல்வி கனவு சிதைந்துவிடும் என சமூக ஆர்வர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.