இரவில் விமான நிலையத்தை பரபரபாக்கிய சகோதரர்கள் ; இத்தாலிக்கு திருப்பி அனுப்பபடும் ஜீவன்கள்
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்குச் சுங்கப் பிரிவினர் 5 இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட புறாக்களின் பெறுமதி சுமார் 3,431,400 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுங்கப் விசாரணை
சந்தேகநபர்கள் வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த 38 மற்றும் 42 வயதுடைய இரு சகோதரர்கள் ஆவர்.
இவர்கள் இத்தாலியிலிருந்து எமிரேட்ஸ் நிறுவனத்தின் EK652 விமானம் மூலம் நேற்று ( 25) சனிக்கிழமை இரவு 7:15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தைச் வந்தடைந்துள்ளனர்.
வருகை முனையத்தின் கிரீன் சேனல் வழியூடாக வெளியேற முயன்றபோது, அவர்களின் 8 பயணப் பெட்டிகளைச் சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அதற்குள் 12 உலோகக் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 64 புறாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
போதிய காற்றோட்டம் மற்றும் முறையான பராமரிப்பு இல்லாததால், கடத்தி வரப்பட்ட புறாக்களில் 8 புறாக்கள் கூண்டுகளுக்குள்ளேயே உயிரிழந்திருந்தன.
சுங்கப் விசாரணைகளின் முடிவில், குற்றவாளியாகக் காணப்பட்ட ஒரு சகோதரருக்கு 4,00,000 ரூபாய், மற்றையவருக்கு 100,000 ரூபாய் என மொத்தம் ரூ. 5,00,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
உயிருடன் மீட்டெடுக்கப்பட்ட எஞ்சிய புறாக்களை உடனடியாக மீண்டும் இத்தாலிக்கே திருப்பி அனுப்புமாறு இலங்கை சுங்கப் பிரிவினர் உத்தரவிட்டுள்ளனர்.