தேசிய வைத்தியசாலை மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய சகோதரர்கள்
கண்டி தேசிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறப்படும் சகோதரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கண்டி தேசிய வைத்தியசாலையின் மனநோய் பிரிவில் கடமையாற்றும் விசேட வைத்தியர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் கைது
காயமடைந்த வைத்தியர் தனது கடமைகளை முடித்துவிட்டு வைத்தியசாலையை விட்டு வெளியேற முயன்றுள்ளார்.
இதன்போது, வைத்தியசாலையின் நுழைவாயிலுக்கு அருகில், முச்சக்கரவண்டியில் பயணித்த இரு சகோதரர்களுக்கும் வைத்தியசாலை காவலாளிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது, சந்தேக நபர்களான சகோதரர்கள் இருவரும் வைத்தியரை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்தவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.