யாழில் வீதியில் சென்ற பல்கலைக்கழக மாணவியை கொடூரமாக தாக்கிய அண்ணன் - தங்கை!
யாழ்ப்பாணம் - வலிகாமம் பகுதியில் பல்கலைக்கழக மாணவி மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருமணமான பட்டதாரி இளம் குடும்பஸ்தரை பொம்பிள்ளைக் கள்ளன் என கூறியதாலேயே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பல்கலைக்கழக மாணவியின் அயல் பகுதியில் வசிக்கும் 28 வயதான பட்டதாரி இளைஞனுக்கு கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்துள்ளது.
குறித்த இளைஞனின் தங்கைக்கும் பல்கலைக்கழக மாணவிக்கும் இடையில் பாடசாலை காலத்தில் இருந்து பகை இருந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள சனசமூக நிலையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வாட்ஸ் அப் குழு ஒன்றில் பல்கலைக்கழக மாணவியும் பட்டதாரியின் சகோதரியும் இருந்துள்ளார்கள்.
குறித்த பட்டதாரி இளைஞனின் திருமண புகைப்படங்கள் அந்த வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டுள்ளது.
அந்த புகைப்படத்திற்கு குறித்த பல்கலைக்கழக மாணவி பொம்பிள்ளைக் கள்ளன் என கருத்து பதிவு செய்ததாகத் தெரியவருகின்றது.
வாட்ஸ் அப் குழுவில் பல்கலைக்கழக மாணவி தனது சொந்த தொலைபேசி இலக்கத்தில் கருத்தை பதிவு செய்யாது மற்றொரு தொலைபேசி இலக்கத்திலிருந்தே கருத்து பதிவு செய்திருந்தார்.
நீண்ட நாட்களின் பின் பட்டதாரி இளைஞனின் சகோதரியின் புலனாய்வுக்குப் பின் குறித்த தொலைபேசி இலக்கம் பல்கலைக்கழக மாணவியுடையது என தெளிவாக அறிந்து தனது அண்ணனிடம் போட்டுக் கொடுத்திருந்தார்.
அதன் பின்னரே மாணவி வீதியால் செல்லும் போது இளைஞனும் தங்கையும் மறித்து தாக்கியதாகத் தெரியவருகின்றது.
தங்கையும் அண்ணனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.