பிரித்தானிய பெண் உயிரிழப்பு; விடுதிக்கு பூட்டு
கொழும்பு, கொள்ளுப்பிட்டி ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் அமைந்துள்ள விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய பெண் திடீரென சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.
அதோடு அந்த விடுதியில் தங்கியிருந்த ஜேர்மன் தம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் இடம்பெற்ற விடுதியை தற்காலிகமாக மூடுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இருவர் மருத்துவமனையில்
சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை கொள்ளுப்பிட்டி பொலிஸார் இன்று திங்கட்கிழமை (03) நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகள் முழுமையான விசாரணையை மேற்கொண்டு அனுமதி வழங்கும் வரை மூடப்படும் என விடுதி நிர்வாகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் வருகை தந்தவுடன் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டடி ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் அமைந்துள்ள விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மூன்று வெளிநாட்டு பிரஜைகள் தங்கியிருந்தனர்.
இதன்போது, திடீரென சுகவீனமடைந்து மூன்று பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தில் 24 வயதுடைய பிரித்தானிய பெண் உயிரிழந்துள்ளதோடு, மற்றைய இருவரான ஜேர்மனிய தம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.