பிரித்தானிய குடியேற்ற விவகாரம் ; இலங்கை இளைஞருக்காக பிரித்தானியாவில் எதிர்ப்பு
பிரித்தானியா ஸ்காட்லாந்துயின் தர்சோ (Thurso) நகரில் வசித்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர் சேம் ஹேரத் (Sam Herath) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி வழக்கமான பதிவு நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையம் சென்றபோது அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் குடியேற்ற தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது அகதி அந்தஸ்து கோரிக்கை பிரித்தானியா அரசால் நிராகரிக்கப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சேம் ஹேரத் இலங்கையில் முன்னாள் பௌத்த துறவியாக இருந்ததாகவும், உயர்மட்ட துறவிகள் மற்றும் அரசியல்வாதிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தியதால் தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் கூறி, சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியாவிற்கு தஞ்சம் கோரி சென்றிருந்தார்.
தர்சோ நகரில் தன்னார்வலராக பணியாற்றி வந்த அவர், அந்நகர மக்களிடையே நல்ல பெயர் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரது கைது செய்தி பரவியதை அடுத்து, 60க்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் திரண்டு அவருக்கு ஆதரவாக வரவேற்பு அளித்துள்ளனர்.
மேலும், அவரது நாடு கடத்தலைத் தடுக்க சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. சட்டச் செலவுகளை ஈடுகட்ட பொதுமக்கள் “GoFundMe” மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.
இதுவரை சுமார் 2,000 பவுண்டுகள் வரை நிதி சேகரிக்கப்பட்டுள்ளதாக தேவாலயத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சட்டவிரோத குடியேற்றங்களை வெளியேற்றுவதில் உறுதியாக இருப்பதாக பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், சேம் ஹேரத் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அவரது ஆதரவாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.