சபாநாயகரின் சாரதிகள் இருவருக்கு இலஞ்ச - ஊழல் ஆணைக்குழு அழைப்பு
சபாநாயகரின் தனிப்பட்ட பணிக்குழாமின் சாரதிகள் இருவருக்கு நாளை (18) மற்றும் நாளை மறுதினம் (19) ஆகிய தினங்களில் இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய, இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் விசேட விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி ஏ.எச்.எம்.ஜி. அபேயசிங்கவினால், பாராளுமன்றத்தின் நிர்வாகப் பணிப்பாளர் ஊடாக குறித்த சாரதிகள் இருவருக்கும் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்திற்குச் சொந்தமான NC - 4923 இலக்க வாகனத்தைப் பொறுப்பேற்றமை மற்றும் அவ்வாகனம் பயன்படுத்தப்பட்ட கடமைகள் தொடர்பான சகல தகவல்கள், 2025 செப்டெம்பர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் சுருக்கம் மற்றும் இவ்வருடம் ஜனவரி மாதம் 07 ஆம் திகதி அவ்வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பான ஆவணங்களுடன் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு சபாநாயகரின் சாரதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதிப் பொதுச்செயலாளரும் பணியாட்தொகுதி பிரதானியுமான சட்டத்தரணி சமிந்த குலரத்னவினால் கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச - ஊழல் ஆணைக்குழு இவ்விசாரணையை ஆரம்பித்துள்ளது.