கதவை உடைத்து பணம் மற்றும் நகை திருட்டு
புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்ற சந்தேக நபர் போதைப்பொருளுடன் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
தங்கொட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் புத்தளம், தங்கொட்டுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் லுணுவில பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபர் , கடந்த 09 ஆம் திகதி தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள விற்பனை நிலையம் ஒன்றை உடைத்து 800,000 ரூபா பணம் மற்றும் 1,490,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள், தங்கச் சங்கிலி , தங்கத் தோடுகள், தங்க மோதிரம், தங்க வளையல் மற்றும் 461,950 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.