பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து ஐந்து வயது சிறுவன் பலி
பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்ததில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளதாக அநுராதபுர எப்பாவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இன்று (29) பிற்பகல் இவ்வாறு உயிரிழந்தவர், எப்பாவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தரெஸ்கம, கல்கந்த புராண விகாரைக்கு அருகில் வசித்து வந்த, எதிர்வரும் வருடம் முதலாம் தரத்தில் இணையவிருந்த ஷெனால் ரதீஷ் அதிகாரி என்ற முன்பள்ளிப் பருவச் சிறுவனாவார்.

சிறுவனின் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருவதுடன், தந்தை கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார்.
தாய் வெளிநாட்டில் இருப்பதால் சிறுவன் தனது பாட்டி மற்றும் தாத்தாவின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்துள்ளான்.
சிறுவன் தனது பாட்டி, தாத்தா மற்றும் 9 வயதுடைய சித்தப்பாவுடன் பாட்டிக்குச் சொந்தமான வயல் நிலத்தில் உள்ள தக்காளித் தோட்டத்திற்குச் சென்றுள்ளான்.
அங்கு தக்காளித் தோட்டத்திற்குச் சுமார் 300 மீற்றர் தொலைவில் உள்ள இடத்தில் தாத்தா நீர் இறைக்கும் இயந்திரத்தைப் பொருத்திக்கொண்டிருந்த போது, அருகிலிருந்த பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றுக்கு அருகில் நின்ற மாமரத்திலிருந்து விழுந்த மாம்பழம் ஒன்றை எடுப்பதற்காகச் சிறுவன் சென்றுள்ளான்.
அந்த மாம்பழம் பழுதடைந்துள்ளதால் அதனை எடுக்க வேண்டாம் எனத் தாத்தா சிறுவனிடம் கூறிவிட்டு மோட்டாரை இயக்கியுள்ளார்.
அதன்பின்னர் சிறுவன் மீண்டும் தக்காளித் தோட்டத்தை நோக்கிச் சென்றிருப்பான் எனத் தாத்தா நினைத்திருந்த போதிலும், சிறுவன் அங்கு இல்லை என்பதை அறிந்து ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் தேடியபோது, சுமார் 10 அடி ஆழமுள்ள பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் சிறுவன் மூழ்கியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
உடனடியாகச் சிறுவனை மீட்டு எப்பாவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.