பூசா சிறைச்சாலைக்குள் ஆடம்பர திருமணம்; கண்காணிப்பாளர் மீது கொடூர தாக்குதல்!
சிறைச்சாலைக்குள் ஆடம்பரமான முறையில் திருமண பதிவினை மேற்கொள்ள அனுமதி மறுக்கப்பட்டமையினால் பூசா சிறைச்சாலை கண்காணிப்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார் .
கண்காணிப்பாளரை கொடூரமாக தாக்கிய பாதாள உலகத் தலைவர் பியூம் ஹஸ்திக என்ற பியூமாவும், மற்றொரு பாதாள உலகக் குற்றவாளியும் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பியூமா என்ற பாதாள உலகத் தலைவர்
பியூமா என்ற பாதாள உலகத் தலைவர் சிறையில் தனது திருமணத்தைப் பதிவு செய்ய நீதிமன்றத்திடம் அனுமதி கோரியிருந்தார். இது ஒரு மனிதாபிமான செயல்முறை என்பதால் நீதிமன்றம் அதற்கான அனுமதியையும் வழங்கியது.
அதன்படி, பூசா சிறையில் தனது திருமணத்தை ஆடம்பரமாக பதிவு செய்ய பியூமா தயாராக இருந்தார். இதற்குத் தேவையான வசதிகளை பூசா சிறை நிர்வாகம் வழங்கத் தயாராக இருந்தது.

அதன்படி, நடனக் குழுக்கள் மற்றும் டிரம் குழுக்களை அழைத்து வந்து திருமணத்தை ஆடம்பரமாக பதிவு செய்ய பியூமா திட்டமிட்டிருந்தார். எனினும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட கோபம் காரணமாக கடந்த ஏழாம் திகதி, குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு கண்காணிப்பாளர் சென்று போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பாதாள உலக குற்றவாளிகளிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கராப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை
தாக்குதலில் காயமடைந்த பூசா சிறைச்சாலை கண்காணிப்பாளர் டபிள்யூ. அரவிந்த, கராப்பிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலகத் தலைவருமான பாணந்துறை குடு சலிந்துவின் நெருங்கிய சகாவான பாதாள உலகக் குற்றவாளி ‘பியூமா’ கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் கப்பம் பெறுதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தின்போது குற்றவாளிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த 63 சிசிடிவி கமராக்களையும் உடைத்து அழித்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் தனது கணவர் மீது திட்டமிட்ட வகையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக, பியூமாவின் காதலி கலுபகே தேவ்மினி விஹாரா, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.